ArticleAwarenessHistory

Thomas Alva Edison History

பிறக்கும் போது சில குழந்தைகள் அறிவுக்கூர்மை உடைய குழந்தைகளாக பிறப்பது உண்டு. ஆனால் அப்படி பிறந்த அனைத்து குழந்தைகளுமே பின்னாளில் சாதித்துவிடும் என்பதற்கு உறுதி கூற இயலாது. அதுபோலவே தான் அறிவுக்கூர்மை அதிகம் இல்லாமல் சராசரியாக பிறக்கும் குழந்தை பின்னாளில் சாதிக்காது என்பதற்கும் எவரும் உறுதி கூற முடியாது. ஆனால் அந்தக்குழந்தைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் கொடுத்து வளர்க்கும் பெற்றோர் கிடைத்து கடுமையான முயற்சி செய்திடும் பழக்கம் கொண்டிருக்கும் எந்தக்குழந்தையும் பின்னாளில் சாதித்துவிடும். இதற்கு யார் வேண்டுமானாலும் உறுதி கூற முடியும். 

ஆரம்ப காலங்களில் ஆசிரியர்களால் தேறாது என ஒதுக்கப்பட்ட ஒரு மாணவர் தான் எடிசன். ஆனால் பின்னாளில் அவர் உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவெடுத்தார் என்றால் அதற்கு அவரது கடும் உழைப்பு தான் காரணம். இதனால் தான் உலகம் இன்றும் இவரை “கண்டுபிடிப்புகளின் அரசன்” என வர்ணிக்கிறது.

பிப்ரவரி 17,1847 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் மிலன் எனும் ஊரில் சாமுவேல் எடிசன் மற்றும் ஜான்சி மேத்தியூஸ் ஆகிய இருவருக்கும் 7 வது மகனாக பிறந்தார் எடிசன். இளம் வயதிலேயே ஸ்கார்லெட் எனும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட எடிசனுக்கு காது கேட்பதில் பிரச்சனை இருந்தது. இதுபோன்ற பிரச்சனைகளால் அவருக்கு 4 வயதுவரைக்கும் பேச்சும் வரவில்லை. அப்படிப்பட்ட சூழலிலும் கூட எடிசனுக்கு எந்தவொரு விசயத்தையும் கூர்ந்து கவனிக்கும் பழக்கமும் அதில் கேள்வி கேட்கும் பழக்கமும் தொற்றிக்கொண்டது. 

பின்னாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை வைத்திருந்த எடிசன் மேற்கொண்ட முதல் ஆராய்ச்சி என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதில் எல்லாருக்குமே பெரிய ஆர்வம் இருக்கும். ஆம் அது நடந்தது அவருடைய 5 ஆம் வயதில். அப்போது முட்டைகளின் மேல் தாய்க்கோழி அமர்ந்து இருப்பதையும் பின்னாளில் கோழிக்குஞ்சு உருவாவதையும் பார்த்த எடிசனுக்கு வந்தது சந்தேகம். இதனை தீர்த்துக்கொள்ள சில முட்டைகளின் மேல்  அவரும் அமர ஆரம்பித்தார். அவரது குடும்பம் அதை கண்டுபிடிக்கும் வரை அவர் அதை தொடர்ந்துகொண்டே தான் இருந்தார். இப்படித்தான் தான் பார்க்கும் ஒவ்வொரு விசயம் குறித்தும் சிந்திக்க துவங்கினார் எடிசன். 

சில உடல் குறைபாடுகளால் 8 வயதில் தான் பள்ளிக்கு அனுப்பப்பட்டார் எடிசன். எடிசன் பின்னாளில்  வருவதற்கு முழு முதற்காரணம் எடிசனின் அம்மா தான் என்றால் மிகை ஆகாது. அவரது அம்மா எப்போதும் சொல்வது ஒரே ஒரு விசயம் தான். “If you learn from your mistakes then you are intelligent. But if you learn from someone’s mistakes, then you are a Genius”. அதாவது, “ஒருவர் அவரது தவறுகளில் இருந்து திருத்திக்கொண்டால் அவர் புத்திசாலி. அடுத்தவரது தவறுகளில் இருந்து திருத்திக்கொள்பவர் மேதை”. 

         ஒருநாள் பள்ளிக்கு சென்றுவிட்டு எடிசன் வீடு திரும்பினார். அப்போது ஆசிரியர் கொடுத்ததாக ஒரு பேப்பரை தனது அம்மாவிடம் கொடுத்தார் எடிசன். அதனை பிரித்துப்பார்த்த எடிசனின் அம்மாவிற்கு கண்களில் நீர் வழிந்தது. அவர் தன்னை தேற்றிக்கொண்டு அந்த கடிதத்தை படித்தார் “Your son is a Genius. This school is not the right place for him, and there are no efficient teachers to train him. So, please train him yourself.” அதாவது உங்களது மகன் ஒரு மேதை. அவன் படிப்பதற்கு இது தகுந்த இடம் அல்ல, மேலும் அவனுக்கு சொல்லிக்கொடுக்க கூடிய அளவிற்கு இங்கே திறமை வாய்ந்த ஆசிரியர்கள் இல்லை” என்றார். 

அதன்பிறகு பள்ளிக்கு செல்வதை எடிசன் நிறுத்திக்கொண்டார். தனது தந்தையின் மூலமாக கிடைத்த புத்தகங்களை வீட்டிலேயே படித்து தனது அறிவை பெருக்கிக்கொண்டார். தனது அம்மா இறந்த பிறகு ஒருமுறை அலமாரியை பார்க்கும் போது தனது இளமைப்பருவத்தில் ஆசிரியர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் உண்மையில் எழுதி இருந்தது இதுதான் “School cannot allow your son to attend classes anymore, he is mentally impaired. He is rusticated.”. அதாவது, உங்களது குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியாக இல்லை ஆகவே அவனை இனிமேல் வகுப்பில் அனுமதிக்க முடியாது” என எழுதி இருந்தது. இதைப்பார்த்து தான் அவரது அம்மா கண்ணீர் வடித்து மாற்றிக்கூறினார். ஒருவேளை இந்தக்கடிதத்தில் இருந்தபடியே அவரது அம்மா படித்திருந்தால் எடிசன் என்ற விஞ்ஞானி அப்போதே முடங்கிப்போயிருப்பார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஊக்கம் கொடுக்க இப்படியொரு அம்மா இருந்தால் நிச்சயமாக எந்தவொரு குழந்தையும் மேதை ஆகும்.

எந்தவொரு கண்டுபிடிப்பாளருக்கும் தோல்வி ஏற்படவே செய்யும். அதிலிருந்து கற்றுக்கொள்பவர் சாதிக்கிறார். எடிசனும் அவ்வழியே. எடிசன் ஆயிரக்கணக்கில் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் அதற்காக எத்தனை முறை தோல்வியை தழுவியிருக்கிறார் என்பதை பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு, மின்விளக்கினை கண்டுபிடித்தாயிற்று, ஆனால் நீண்ட நேரம் நீடித்து எரிவதற்கு தகுந்த மின் இழையை எந்த பொருளில் உருவாக்குவது என்பதில் பெரிய சிக்கல் உண்டானது. எந்த பொருளில் செய்தாலும் அது உருகிப்போனது அல்லது துண்டானது. கிட்டத்தட்ட 5000 முறை வேறு வேறு பொருள்களால் ஆன மின் இழையை அவர் சோதனைக்கு உட்படுத்தினார். அப்போதும் அவர் ஓயவில்லை, கேட்டால் இதையெல்லாம் நான் தோல்வி என சொல்ல மாட்டேன். 5000 பொருள்களும் இதற்கு பயன்படாது என்பதை நான் கண்டறிந்து இருக்கிறேன் என நம்பிக்கையோடு பேசுவார் எடிசன். இறுதியாகத்தான் டங்ஸ்டன் இழையை கண்டுபிடித்தார். 

டிசம்பர் 10,1914 இல் நியூ ஜெர்சியில் இருக்கக்கூடிய வெஸ்ட் ஆரஞ்சு பகுதியில் இருக்கும் எடிசனின் மிகப்பெரிய தொழிற்சாலை தீ விபத்தை சந்தித்தது. 10 மிகப்பெரிய தொழிற்கூடங்கள் இந்த தீ விபத்தில் சிக்கி இருந்தது. அந்த தருணத்தில் எடிசன் அமைதியாக ஓரமாக உட்கார்ந்துகொண்டு தனது தொழிற்கூடம் தீயில் எரிவதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார். அதோடு நிற்காமல், அருகே இருந்த அவரது மகனை அழைத்து வீட்டில் இருக்கும் உன் அம்மா மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு வா. இனி எப்போதும் அவர்களால் இப்படியொரு தீ விபத்தை பார்க்க முடியாது என்றார். அதிர்ச்சி அடைந்த அவரது மகன் “அப்பா நமது முழு தொழிற்கூடமும் தீயில் இரையாகிக்கொண்டு இருக்கிறது, இப்படி சொல்கிறீர்களே என்றார்”. அதற்கு எடிசன் “ஆமாம் நமது தொழிற்கூடம் தற்போது தீயில் சாம்பலாகிக்கொண்டு இருக்கிறது. அதோடு சேர்த்து நமது தவறுகளும் சேர்ந்து தான் சாம்பலாகிக்கொண்டு இருக்கிறது. நாம் நாளை மீண்டும் துவங்குவோம்” என்றார். இதுதான் எடிசன். இதனால் தான் அவரால் உலகின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாளராக உயர முடிந்தது.

எடிசன் என்றால் நம் நினைவுக்கு வரக்கூடிய கண்டுபிடிப்புகளில் முதன்மையானது மின்சார பல்பு. 1870 க்கு முன்னதாக எவரும் கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இனி இரவும் பகல் போல மின்சார விளக்குகளால் மாறப்போகிறது என்று. அப்போது சில அறிவியலாளர்கள் சொன்னதைக்கூட நம்புவதற்கு ஆள் இல்லாத சூழல் இருந்தது. ஆனால் எடிசன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மட்டும் அதற்கான முயற்சிகளில் உலகின் பல்வேறு இடங்களிலும் ஈடுபட்டார்கள். 

 மின்சார பல்பு கண்டறிவதில் இருக்கக்கூடிய மிக முக்கியமான சிக்கல் என்னவெனில் அதில் பயன்படுத்தக்கூடிய மின் இழையானது வெகு விரைவில் உருகி விடுகிறது. இதற்காக எடிசன் பல்வேறு பொருள்களை மின் இழையாக பயன்படுத்திப்பார்த்தார். அப்போதைய காலகட்டத்தில் எடிசன் மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் விஞ்ஞானிகள் பல்வேறு பொருள்களை வைத்து சோதனை நடத்திக்கொண்டு இருந்தார். இந்த முயற்சியில் எடிசன் 5000 முறைக்கும் மேல் பரிசோதனையில் ஈடுபட்டார். பிளாட்டினம் பொதுவாக மற்ற பொருள்களைக்கட்டிலும் அதிகமாக வெப்பநிலையை தாங்கும் என அவர் அறிந்திருந்தார். 

 ஆனால் அதற்கு பிளாட்டினம் நிறைய தேவைப்பட்டது. அதிக பல்புகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாலும் அதிகமாகி பிளாட்டினம் தேவையாக இருந்தது. ஆனால் எடிசன் தயங்கவில்லை, உடனடியாக உலகம் முழுமைக்கும் இருக்கக்கூடிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இந்த உலோகம் எங்கிருந்தாலும் கூறுங்கள் என கேட்டு சிறிதளவு பிளாட்டினத்தையும் அதில் சிறிதளவு இணைத்து அனுப்பினார். அதோடு $20,000 பரிசையும் அறிவித்தார் எடிசன். 

 இந்த கண்டுபிடிப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போதே அவர் இன்னொரு வியாபாரத்தையும் கண்டுபிடித்தார். அவர் மைனிங் வேலையின் போது கிடைக்கக்கூடிய குவியல்களில் இருந்து தங்கத்தை பிரித்தெடுக்கும் முறையை கண்டறிந்தார். இதன்மூலமாக $5 செலவில் கிடைக்கக்கூடிய குவியலில் இருந்து $1400 மதிப்பிலான தங்கத்தை பிரித்தெடுத்தார். சிறிது ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இது மிகப்பெரிய லாபம் தரும் முறையாக பார்க்கப்பட்டது. எடிசன் பல்புகளுக்கு பிளாட்டினம் பயன்படுத்த துவங்கிய விசயம் வெளியான 5 ஆண்டுகள் கழித்து பிளாட்டினம் விலையில் மிகப்பெரிய ஏற்றம் இருந்தது. 

 எடிசனை போன்று மின்சார பல்பு தயாரிப்பில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஜோசப் ஸ்வான் கூட அதே மாதிரியான ஆய்வில் ஈடுபட்டார். பல சமயங்களில் ஸ்வானின் ஐடியாவைக்கூட பயன்படுத்தி இருக்கிறார். இந்த இருவரின் நிறுவனங்களும் கூட பின்னாளில் இணைந்து செயல்பட்டிருக்கிறது. அந்த இணைவிற்கு பிறகு பாம்பூ பிளைமண்ட் ஆனது செல்லுலோஸ் ஆக மாறியது. 

 அதன் பிறகும் கூட எடிசன் தனது ஆய்வினை தொடர்ச்சியாக செய்துகொண்டே இருந்தார். ஜனவரி 27,1980ஆம் ஆண்டு அமெரிக்கா அவரது மின்சார பல்புக்கு காப்புரிமையை வழங்கியது. ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்திட வேண்டுமெனில் அதற்காக கடுமையான உழைப்பு மட்டும் இருந்தால் போதுமானது அல்ல. மிகப்பெரிய பொருள்செலவும் தேவைப்பட்டது. ஆனால் எடிசன் பணம் செலவாவதைப்பற்றி எப்போதும் கவலைப்பட்டதே இல்லை. அவர் மிகப்பெரிய வருமானத்தை தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்துகொண்டே இருந்தார். 

மிகக்கடுமையான உழைப்பு, எப்போதும் அயர்ந்துவிடாத தொடர் முயற்சி, மிகப்பெரிய பொருள் செலவு போன்ற பல்வேறு காரணங்கள் தான் இன்றளவும் கண்டுபிடிப்புகளின் பேரரசன் என அனைவராலும் புகழப்படுகிறார் தாமஸ் ஆல்வா எடிசன்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button