AwarenessFoods

கலைத்தாயின் மறுவுருவம் – ருக்மினி தேவி அருண்டேல்

ஆரம்பத்தில் ஒரே ஒரு மாணவரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கலாக்ஷேத்ரா நடனப் பள்ளி, இன்று சென்னையின் அடையாளங்களின் ஒன்றாக விளங்குவதற்கு காரணமாக இருந்த இப்பள்ளியின் நிறுவனர் திருமதி. ருக்மினி தேவி அருண்டேல் அவர்களைப் பற்றி அவரின் ஆஸ்தான மாணவர்
திரு. வி.பி. தனன்ஜெயன் கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.

ருக்மினி தேவி, 1904 ஆம் ஆண்டு மதுரையில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவருடன் உடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அதுவரை பரதக் கலை, கோவில்களுக்காக அற்பணம் செய்யப்பட்ட பெண்கள் (தேவதாசி) ஆடும் ஒன்றாகவே கருதப்பட்டது. 1920இல் தன்னை விட 20 வயது மூத்தவரும் ஆங்கிலேயருமான திரு. ஜார்ஜ் அருண்டேலை திருமணம் செய்துகொண்ட பின்னர், ருக்மினி தேவியின் வாழ்க்கை பல மாற்றங்களைச் சந்தித்தது. பல ஊர்களுக்கு பயணம் செய்தார். டாக்டர். அன்னி பெசன்ட் அம்மையாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

ருக்மினி தேவி ஆஸ்திரேலியாவிற்கு பயணம் செய்தபோது புகழ்பெற்ற பேலே நடன கலைஞரான ஆனா பாவ்லோவைச் சந்தித்தார். அவர் அறிவுரையின் பெயரில் ருக்மினி தேவி பேலே நடனத்தைக் கற்றுக்கொண்டார். ஆனால், தனக்கு விருப்பமான கர்நாடக இசையில் அமைந்த பரதக் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். அன்றையக் காலகட்டத்தில் நடனத்தில் முன்னோடியாக கருதப்பட்ட நட்டுவனார் திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் பரத நாட்டியம் கற்றுத் தரும்படி கேட்டுக்கொண்டார். ஆரம்பத்தில் தயங்கினாலும், ருக்மினி தேவியின் ஆர்வத்தை கண்ட அவர் அதற்கு ஒப்புக்கொண்டார். டிசம்பர் மாதம், 1935இல் ருக்மினி தேவி அவர்கள் தியோஸாஃபிகல் சொஸைட்டியின் 60 ஆண்டு நிறைவு விழாவில் அனைவரையும் அசரவைக்கும் ஒரு நடனத்தை வழங்கினார். ஒரு சில மாதங்கள் கழித்து அவர் இன்டர்நேஷனல் அகடெமி ஆஃப் ஆர்ட்ஸை (தற்போது, கலாக்ஷேத்ரா) தொடங்கினார். இன்று அப்பள்ளி சென்னைக்கே பெருமை சேர்க்கும் விதமாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

“கதக்களி மேஸ்ட்ரோவான குரு சந்து பனிக்கருடனான என் ரயில் பயணம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்டது” என்கிறார் பரதக் கலைஞர் திரு. தனன்ஜெயன் அவர்கள். ”1953ஆம் ஆண்டு சந்து பனிக்கர் சென்னையில் ருக்மினி தேவி அவர்களுக்கு ஒரு உதவியாளர் வேண்டும் என்பதால் பாலகோபாலன் என்ற சிறுவனை அழைத்துச் செல்வதாக என் தந்தையிடம் கூறினார். அதைக்கேட்ட அவரும், தன் மகன்களில் ஒருவரையும் அவருடன் அழைத்துச் செல்லும்படி கூறினார். அதற்கு ஒப்புக்கொண்ட சந்து பனிக்கர், என்னை தேர்வு செய்தார். ஆனால், ருக்மினி தேவி அவர்கள் ஒருவரைத் தான் அழைத்துவர சொன்னதாகவும், மற்றொருவரை வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பி விடுவேன் என்றும் எச்சரித்தார்.” என்று நினைவுகூறுகிறார் அவர். “அக்டோபர் 5 ஆம் தேதி, விடியற்காலை, எங்கள் இருவரையும் பார்த்த ருக்மினி தேவி அவர்கள் ‘ராமர், லக்‌ஷ்மணர் இருவரும் வருகிறார்களே’ என்று கூறினார்”. அவர் கூறிய விஷயம், எங்கள் நாட்டியத்தால் உண்மையும் ஆனது. அங்கு நடத்தப்பட்ட சீதா சுயம்வரம் என்ற நடன-நாடகத்தில் நான் ராமராகவும் பாலகோபாலன் லக்‌ஷ்மணர் வேடத்தில் நடித்தோம். அன்று முதல் கலாக்ஷேத்ராவை விட்டு வெளியேறியது வரை தனது பங்கு அதில் இருப்பதாக தனன்ஜெயன் கூறினார். “என் வாழ்க்கையின் பெரும் பகுதியை கலாக்ஷேத்ராவில் தான் கழித்திருக்கிறேன். 1963இல் திருவான்மியூரில் இப்பள்ளியை மாற்றியபோது, அதிலும் என் பங்கு நிறையவே இருந்தது. நாங்கள் அனைவரும் இப்பள்ளியை புது இடத்தில் அமைக்க கற்கள் கொண்டு வருவது, மணலை பரப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டோம். இங்கு எனக்கு கச்சேரிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால், நான் கலாக்ஷேத்ராவிற்கு வெளியே பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தேன். அப்போது ருக்மினி தேவி எனக்குக் கற்றுக்கொடுத்த விஷயம், எங்கள் நடன அசைவுகளில் பெண்ணிய அசைவுகளை தவிர்க்கவேண்டும்.”

*புதுமண தம்பதிகள் திரு. வி.பி. தனன்ஜெயன் மற்றும் சாந்தா தனன்ஜெயனுடன்

“என் குருவிடம் நான் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். அதை இன்று என் மாணவர்களுக்கு நான் பயிற்றுவிக்கிறேன். இதை நான் 3ஞி என்பேன் -ஒழுக்கம் (ஞிவீsநீவீஜீறீவீஸீமீ), பக்தி (ஞிமீஸ்ஷீtவீஷீஸீ), அர்ப்பணிப்பு (ஞிமீபீவீநீணீtவீஷீஸீ). என்னைப் பொருத்தவரை ருக்மினி தேவி அவர்கள் பாரதத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தின் உருவகமாக திகழ்கிறார். ஒருமுறை விழா ஒன்றின் போது குத்துவிளக்கு ஒன்று ஏற்றப்பட்டிருந்தது. அதை சுற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதைப் பார்த்த ருக்மினி தேவி, அங்கிருந்த மாணவிகளை அழைத்து அந்த மலர்களை எடுத்துவிடச் சொன்னார். அந்த விளக்கே பார்க்க அழகாக இருப்பதாகவும், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டதாகவும் இருப்பதால், அதை ஏன் அலங்காரம் என்ற பெயரில் மலர்களைக்கொண்டு மூடவேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அப்படிப்பட்ட ஏஸ்தெடிகல் சென்ஸ் (அழகியல் உணர்வு) கொண்டவர் அவர்” என்று புகழாரம் சூட்டுகிறார் தனன்ஜெயன். ஆனாலும் தங்களுக்குள் பல வாக்குவாதங்கள் நடைப்பெற்றிருப்பதாகவும், இருப்பினும் ருக்மினி தேவி மீது அவருக்கு இருந்த மரியாதை சிறிதளவும் குறையவில்லை என்றும் கூறுகிறார். “கலாக்ஷேத்ராவில் எங்களுக்கு கிடைத்த சம்பளம் ` 150. திருமணமான எனக்கு இந்த சம்பளம் போதவில்லை. ஆகையால் நாங்கள் அனைவரும் சம்பள உயர்வு கேட்க வேண்டும் என்று நினைத்தோம். 1967இல், எங்களின் நிபந்தனைகளை எழுதி கையெழுத்திட்டு, அதை ருக்மினி தேவியிடம் கொடுத்தோம். கோபமடைந்த அவர் எங்கள் அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்துப் பேசினார். மற்றவர்கள் எதுவும் கேட்டுக்கவில்லை. ஆனால், நான் என் குறையை அவரிடம் கூறினேன். எனக்கு மட்டும் ` 100 அதிகம் தருவதாகச் சொன்னார். ஆனால், மற்றவர்களுக்கும் அதைத் தரவேண்டும் என்று நான் அழுத்தமாக கூறிவிட்டேன். அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் நான் கலாக்ஷேத்ராவை விட்டு வெளியேறினேன்” என்றார். “இருப்பினும், என் வாழ்க்கை அங்கு தான் ஆரம்பித்தது. ருக்மினி தேவி எனக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருந்தார். அங்கு நாங்கள் இசை, நடனம் மட்டுமல்லாமல் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என்று பல மொழிகளையும் கற்றுக்கொண்டோம். தலாய் லாமா, காமராஜர், ராஜாஜி, மைசூர் மகாராஜா போன்ற பல புகழ்பெற்ற தலைவர்கள் கலாக்ஷேத்ராவிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் கலந்துரையாடியதையும், அவர்களின் சிறப்புரைகளை கேட்டு ரசித்ததையும் என்னால் மறக்கமுடியாது” என்ற திரு. தனன்ஜெயன் “அவர் கலைக்காக மட்டும் பாடுபடவில்லை. விலங்குகள் மீது பாசம் காட்டவும் பல பிரச்சாரங்களைச் செய்திருக்கிறார்”.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button